சென்னை: டெல்லியில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தரக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில், தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் கடந்த மாதம் சர்வதேச மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

அவர்களில் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்ட 559 பேர், டெல்லி மாநில அரசின் தனிமைப்படுத்துதல் முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

இந் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தை சேர்நத 559 பேர், கொரோனா அறிகுறிகளுடன் டெல்லியில் தனிமைப்படுத்தல் முகாம்களிலும், மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து தர வேண்டும். ரமலான் நோன்பு தொடங்கவுள்ளதால், தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் அவர்களில் நீரிழவு நோய் உள்ளவர்களுக்கு தேவையான மருத்து, மாத்திரைகள் போன்ற அவசிய தேவைகளையும் நிறைவேற்றி கொடுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.