முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடியாக உயர்வு… தமிழக அரசு!

சென்னை

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வாரி வழங்குங்கள் என்று 3 முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் நிறுத்தப்பட்டு நிவாரண நிதிக்கு மாற்றப்பட்டது.

மேலும்  அரசியல் கட்சிகள், தொழில் அதிபர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கும், மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 347,76 கோடி நன்கொடை வந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஒருநாள் ஊதியத்தை வழங்கிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ரூபாய் 20 கோடியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூபாய் 5 கோடியும் நன்கொடை வழங்கியுள்ளன.

(01.05.2020- 05.05.2020) ஐந்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 41 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 882 ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.