தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க ஜன. 31 வரை உயர்நீதிமன்றம் கெடு

சென்னை:

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை வரும் 31ம் தேதி அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த அக்டோபார் 24ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தற்போது தனி அலுவலர் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் 17, 19ம் தேதிகளில் நடக்க இருந்த தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட விதம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிராக உள்ளது. சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என நீதிமனறம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதன் மீதான மாநில ஆணையத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமனறமும் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 முறை அவகாசம் வாங்கியுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடுவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வரும் ஏப்ரலுக்குள் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அவகாசம் அளிக்க மறுத்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 31ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் 5 வார கால அவகாசம் தேவை என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை குறித்த இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.