சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக  அதிமுக தலைமை அலுவலகத்தில்  அவசர ஆலோ சனை நடைபெற்றது. இதையடுத்து, தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் மதுசூதனன் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருதுகணேஷ் மற்றும் சுயேச்சையாக டிடிவி தினகரன் உள்பட 70க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

இருந்தாலும், இந்த தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வது, மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்களுடன், மூன்றரை மணி நேரம் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.‘

ஆர்.கே.நகரில் கடுமையான போட்டி நிலவி வருவதால், அதை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைப்பது தொடர்பாகவும், பிரச்சார யுக்தி பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும்,  தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக தேர்தல் பணி பொறுப்பாளர்களின் பணி அட்டவணை பட்டியல் இன்று வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.