சென்னை:
சாத்தான்குளம் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சாத்தான்குளம் செல்ல இருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகனை, சாத்தான்குளம் காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதில், அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.நா சபையும் தமிழக முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தந்தை மகனை இழந்த பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாத்தான்குளம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பூதாகரமாக எழுந்துள்ள பிரச்சினையை அமைதிப்படுத்தும் நோக்கில்,  தந்தை – மகனை இழந்த குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லவும், ஏற்கனவே அறிவித்தபடி அவரது  குடும்பத்தில் ஒருவருக்கு  அரசுப் பணிக்கான நியமன ஆணையை வழங்கவும் முதல்வர்  விரைவில் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.