கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று (16.04.2020) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இன்று மேலும் 38 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,242 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும், கரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.