கஜா நிவாரணம் கோரி மோடியை சந்திக்க எடப்பாடி இன்று மாலை டில்லி பயணம்

சென்னை:

மிழகத்தில் பேரழிவை ஏற்படுத்தி உள்ள கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  இன்று மாலை டில்லி பயணம் செல்கிறார்.

டில்லியில் நாளை  பிரதமரை சந்தித்து புயல் நிவாரண நிதியுதவி கோர திட்டமிட்டுள்ளார்.

எடப்பாடி – மோடி சந்திப்பு (பைல் படம்)

கடந்த  15-ம் தேதி தமிழகத்தை சூறையபாடிய  கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களை சின்னாப்பின்னமாக்கி சிதைத்து சென்றுள்ளது.

இந்த புயலுக்கு  45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கஜாவின் கோர தாண்டவத்தால் அந்த பகுதிகளில்  சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள், 20ஆயிரத்துக்கும் மேலான மின் கம்பங்களும் சேதமாகியுள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.  ஒருலட்சத்து 30 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 88 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் நாசம் அடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 1000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

தற்போது அந்த பகுதிகளில்  மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைகளில் விழுந்து கிடக்கும்  கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், புயலின்போது சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்து, மின் விநியோகத்தை சீரமைப்பதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மின்வாரிய ஊழியர்களும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில, இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்கிறார். நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசும் முதல்வர், தமிழகத்தில் புயல் நிவாரண நிதி அளிக்க கோருகிறார். இதற்காக  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஆலோசனை நடத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து  சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய கோப்பு தயாரிக்கப்பட்டு அதை மத்திய அரசிடம் தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.