உள்ளாட்சித் தேர்தல்: விருப்பமனு வழங்கப்படும் தேதிகளை அறிவித்தது தமிழக காங்கிரஸ் கட்சி

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெற இருப்பதால், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு வழங்கப்படும் தேதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

அதன்படி,  உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு நவம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவின்படி பஞ்சாயத்துராஜ் நகர்பாலிகா சட்டம் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு அடுத்த நிலையில் உள்ளாட்சி மன்றங்களும் சட்டவடிவம் பெற்றது. இதன்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

ஆனால், கடந்த அக்டோபர் 2016 இல் தமிழகத்தில் நடைபெற வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மூன்றாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் பல்வேறு முறைகேடுகளின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தல்களை முறையாக, பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2019 மே 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டுமென ஆணை யிடப்பட்டது. அதற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கு தமிழக மாநில தேர்தல் ஆணையம் 2019 அக்டோபர் 31 ஆம் நாளுக்குள் தேர்தல் நடத்தப்படும் என உறுதி கூறியது. ஆனால், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுமா, நடைபெறாதா என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறுகிற அமைச்சரவை கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவிகளை நேரடியாக தேர்ந்தெடுக்காமல் மறைமுக தேர்தல் கொண்டு வருவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு அ.தி.மு.க. அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் கலந்து பேசி, கருத்தொற்றுமை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதையும் மீறி அ.தி.மு.க. அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமேயானால் அதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது.

ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் எந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவோம் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் உறுதி கூறியதோ, அந்த அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஓரணியில் திரண்டு அ.தி.மு.க.வை தோற்க்கடிக்கிற வகையில் வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலை ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. சந்தித்த போது பெற்ற வெற்றி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது 1.1 சதவீத வேறுபாட்டில் தான் வெற்றி பெற முடிந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுபோல, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 39 இடங்களில், 38 இடங்கள் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி வெற்றி பெற்றது. இடைத் தேர்தல்களின் வெற்றி என்பது பணநாயகத்திற்கு கிடைத்த வெற்றியே தவிர, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருத முடியாது.

எனவே, உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வருகிற மக்கள் விரோத கொள்கை கொண்ட அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டியதை தலையாய பணியாக காங்கிரஸ் கட்சி கருதுகிறது. அதற்காக காங்கிரஸ் கட்சியினர் இன்றிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடிப்படை பணிகளை உடனடியாக துவக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில்,

1. மாநகராட்சி மேயர் :- ரூ.10,000
2. மாநகராட்சி வார்டு உறுப்பினர் :- ரூ.3,000
3. நகராட்சித் தலைவர் :- ரூ.5,000
4. நகராட்சி வார்டு உறுப்பினர் :- ரூ.2,000
5. பேரூராட்சித் தலைவர் :- ரூ.3,000
6. பேரூராட்சி வார்டு உறுப்பினர் :- ரூ.1,000
7. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் :- ரூ.3,000
8. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் :- ரூ.2,000

என நன்கொடைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் 50 சதவீத கட்டணம் செலுத்தினால் போதுமானது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுகிற விருப்ப மனுக்களை வருகிற நவம்பர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நன்கொடைத் தொகையோடு, பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் திரும்ப பெற வேண்டும். திரும்ப பெறப்பட்ட மனுக்களுடன் நவம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும் போது பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் அனைத்தையும் உரிய தொகையுடன் மாவட்டத் தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.