Random image

அதிமுக அரசின் 3 ஆண்டுகள் சாதனை அல்ல, கடும் சோதனை: தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: எடப்பாடி பழனிசாமி அரசின் மூன்றாண்டுகள் சாதனை என்று சொல்வதை விட, சோதனை என்றே சொல்ல வேண்டும் என்று தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2017ல் பிப்ரவரி 16ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை என்று பேசப்படுகிறது.

ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாது என்பதால் அதிமுக ஒன்றுபட்ட சக்தியாக இருந்து வருகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் வித்தியாசம் வெறும் 5 லட்சம் தான். 1.1 சதவிகித வாக்குகள் கூடுதலாக பெற்று தான் ஜெயலலிதாவே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகளை ஆய்வு செய்கிற போது பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விட மாட்டோம் என்றுச் சொன்னவர்கள், மத்திய பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பை 2016 முதல் ஏற்றுக்கொண்டு அமல்படுத்தி வருகிறார்கள்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3033 மாணவர்களில் பயிற்சி வகுப்புகளில் சேராத 48 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. இத்தகைய அநீதி காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்ததா? தொழில்கள் தொடங்கப்பட்டதா ? வேலை வாய்ப்புகள் பெருகியதா ?

ஆனால், நடைமுறையில் அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9,351 குரூப்4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கிறது. ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4,600 மனுக்கள் வந்துள்ளன.

இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் எடப்பாடி ஆட்சியின் முத்திரைப் பதித்த மூன்றாம் ஆண்டு முதலிடத்திற்கான சான்றா?

தமிழக நலன்களை பாதிக்கிற ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம், ரெயில்வே தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, சிவகாசி பட்டாசுக்கு தடை, கரும்பு சாகுபடி குறைப்பு என பல்வேறு நிலைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்காக நடைபெற்ற கடும் போராட்டத்தை தவிர்ப்பதற்காகவே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.

எனவே, எடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, சோதனை என்றே சொல்ல வேண்டும். சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, மக்களுக்கு அதிமுக அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.