சென்னை: தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது.

சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

5,914 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில், 826 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 1975 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில் தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது:

கொரோனாவில் இருந்து இதுவரை 1020 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 60 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் மேலும் 1 நபர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 25,503 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 19 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 87,605 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 7,495 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகளவாக தமிழகத்தில் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 54.11 % பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது. தமிழகத்தில் குணம் அடைந்தவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.