கொரோனா தொற்று விகிதம் – நாட்டிலேயே மாறுபட்டு நிற்கும் தமிழ்நாடு!

சென்னை: கடந்த இரண்டுமாத காலத்தை ஒப்பிடுகையில், கொரோனா தொற்றின் அளவு, இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வேறுபட்டு காணப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாத மத்தியில், நாடெங்கும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தமிழ்கத்தில் நிலைமை வேறாக இருந்தது. ஜூலை இறுதிவாரத்தில், தினசரி தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் 6000ஐ தாண்டியிருந்தது.

அக்டோபர் மாத மத்தியகாலம் வரை அது 5500 என்பதாக இருந்தது. ஆனால், அக்டோபர் இறுதியிலேயே அந்த தினசரி எண்ணிக்கை 2627 என்ற அளவிற்கு சரிந்தது. தொற்று எண்ணிக்கை 61% குறைந்த இந்த சூழலில், பரிசோதனை எண்ணிக்கை 18% அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மத்தியப் பகுதியில் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 90049 என்ற அளவிற்கு உயர்ந்தது. ஜூன் முதல் வாரத்தில், பரிசோதனைக்கு உட்படுவோரில் 12.5% பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

ஆனால், அக்டோபர் 2வது வாரத்தில் தொற்று கண்டறியப்படுவோரின் விகிதம், பரிசோதனைக்கு உட்படுவோரின் எண்ணிக்கையில் 5% என்பதாக குறைந்தது. அதேசமயம், அக்டோபர் இறுதிவாரத்தில் அந்த விகிதம் 3.5% என்ற அளவிற்கும் இறங்கியது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த 10 மாநிலங்களில், பாதிப்பு விகிதம் 5% என்பதற்கும் கீழே சென்றது தமிழ்நாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பகுதியில், அதிகளவு பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று விகிதம் 5% க்கு கீழாக குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு கண்டறியப்பட்டால், அப்பகுதியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று அர்த்தம் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்று.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இங்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையின் முடிவுகளே நம்பப்படுகின்றன. முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லா, அதேசமயம் விரைவாக முடிவுகள் கிடைக்கக்கூடிய ஆன்டிஜன் பரிசோதனைகள் இங்கே நம்பப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்டிஜன் பரிசோதனை அதிகம் மேற்கொள்ளப்படும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், அதிக தொற்றுகள் கண்டறியப்படாமலே போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.