சென்னை:

டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்ச்சி பெறாததால் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ள சுமார் 1500 ஆசிரியர்களுக்கு 10நாட்கள் சிறப்பு பயிற்சி கொடுத்து, அவர்களை தேர்ச்சி பெற செய்ய மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முன்வந்துள்ளது.

ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் என்று மத்தியஅரசின் உத்தரவை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக தேர்வெழுதியும் இன்னும் தேர்ச்சி பெறாமல் 1500 ஆசிரியர்கள்  அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை உடனே  பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, 1500 ஆசிரியர்களின் பணிநீக்கத்தைத் தவிர்க்க கடைசி வாய்ப்பாக,  ஜூனில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில், 1500 ஆசிரியர்களும் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக பயிற்சி வழங்க  பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.

இதன்படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், குறுகிய கால பயிற்சிக்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரியை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆசிரியர் தகுதித் தேர்வில் கருத்தாளர்களாக செயல்பட்ட முதுநிலை விரிவுரையாளர் கள், விரிவுரையாளர்களைக் கொண்டு 1500 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.