தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் பைத்தான் கணினி மொழித் தேர்வில் தடுமாற்றம்

மிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாம் பருவத்தேர்வு முடிவுகள் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டது. அதில் 64810 பேர் பைத்தான்  கணினி மொழி தேர்வில் 31,044 (48%) பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

இன்று பைத்தான் மொழி உலக அளவில் பரவலாக பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு கணினி மொழி, அதில் கணினி மென்பொருள் நிரலாக்கம்( Computer programming), செயற்கை நுண்ணறிவு நிரலாக்கம்(AI), பொருட்களின் இணையம்(IoT), ஆழக்கற்றல் (Deep Learning), ரோபாடிக்ஸ் தொழில்நுட்பம் (Robotics) என எல்லாத்துறைகளிலும் பைத்தான் கணினி மொழி பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதி பேர் அண்ணா பல்கலைக்கழகத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளது வருத்தமான விசயமாேவே உள்ளது

தமிழிலயே நிரலாக்கம் செய்யும் எழில் தமிழ் மொழியும் இதே பைதான் நிரலில்தான் உருவாக்கப்பட்டுள்ளது

இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் பைத்தான் மொழியை போதிக்கும் அளவு கல்லூரி பேராசிரியர்களும் தங்கள் புலமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்

இது குறித்து தமிழகத்தில் பைத்தான் மொழியை இலவசமாக பயிற்சிக்கொடுத்து வரும் கணியம் அமைப்பின்  தோற்றுநர் திரு.த.சீனிவாசன் அவர்களிடம் கேட்டபோது

1. முதல் பருவத்தில் நிரலாக்கம் இருக்கக்கூடாது. கணினி அறிமுகம் மட்டுமே இருக்க வேண்டும். பல்வேறு கல்வி, பொருளாதாரச் சூழல்களில் இருந்து வரும் மாணவர்கள் பலர் கல்லூரி முதல் பருவத்தில்தான் கணினியையே பார்க்கும் நிலை உள்ளது. கணினி கற்கும் போது, எளிய பயன்பாடுகள் மட்டுமே பாடத்தில் இருக்க வேண்டும்.  நடக்க கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயத்தில் தேர்வு வைப்பதற்கு ஈடானது இது.

2. மாணவர்களுக்கு கற்றுத் தரும் கல்லூரி ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு பைதான் தெரியும்? அவர்களுக்கு என்ன வகையான பயிற்சிகள் அளிக்கப் பட்டுள்ளன என்பதும் கேள்விக்குறியே.

3. பைதான் உண்மையிலேயே எளிய கணினி மொழி. ஆங்கிலம் படிக்கத் தெரிந்த அனைவரும் எளிதில் கற்கலாம். ஆனால், கணினி பயிற்சி இல்லாத, ஆங்கிலப்பயிற்சி இல்லாத, பைதான் தெரிந்த ஆசிரியர் முதல் பருவ மாணவர்களுக்கு இதில் தேர்வு வைப்பது அவர்களுக்கு பெரும் சுமையை தந்திருக்கும்.

4. முந்தைய வருடங்களில் சி மொழி இருக்கும் போது, பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சி மொழி தெரிந்திருக்கும். ஆயினும் அப்போதைய முதல் பருவத்தில் நிரலாக்கம் இருந்திருக்குமெனில், அப்போதும் மாணவர்களுக்கு கடினமாகவே இருந்திருக்கும். அப்போதைய தேர்ச்சி எண்கள், விழுக்காடுகளை சோதிக்க வேண்டும்.

5. சில கல்லூரிகளில் கணினி நிறுவனங்களில் பணிபுரியும் சிலரை அழைத்து வந்து, ஓரிரு நாள் பயிலரங்கு என்று பைதான் கதை சொல்லி விட்டு, அத்தோடு பைதான் கற்பித்தலை முடித்திருப்பர்.

6. அடுத்த ஆண்டுகளில் பின்வரும் மாற்றங்களை செயல்படுத்தினால், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.

1. முதல் பருவத்தில் கணினி அறிமுகம்,
2. இரண்டாம் பருவத்தில் பைதான் நிரலாக்கம் அறிமுகம்
3. ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளித்தல்
4. மாணவர்களுக்கு தமிழில் காணொளி பாடங்கள் அளித்தல்
5. தேர்வுகளில் எளிய கேள்விகளை எழுப்பி, மாணவர்களின் கற்றலை சோதித்தல்.

போன்ற வழிகளில் நாம் போதிக்கவேண்டும், இவ்வாறு செய்தால் எந்த நிரலாக்கத்திற்கும் நாம் தயங்கவேண்டியதே இல்லை என்று  கூறினார்.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பது ஒவ்வொரு விநாடியும் தன்னை புதுப்பித்துக்கொண்டேயுள்ளது. இச்சூழ்நிலையில் கணினி , தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைவருமே தங்களை புதுப்பித்துக்கொண்டேயிருப்பது அவசியமாகிறது. ஏனெனில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் நடைபெறும் மாற்றம், உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்.
எனவே இங்கே மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பினரும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது

-செல்வமுரளி