சென்னை,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் இன்று தமிழக சட்டமன்றத்தில் அகில இந்திய மருத்துவ நுழைவு (நீட்) தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கும் அளிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தார்.

 

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் இந்த நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அதற்கான சட்டம் இயற்ற கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கை கான சட்ட முன் வடிவு இன்று தமிழக சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யப்பட்டது.

முதுநிலை படிப்புகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

நீட் தேர்வு எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. ஆனால்,  தமிழகத்தில் சிபிஎஸ்சி பாடத்திட்டப்படி குறைந்த கல்வி நிறுவனங்களே உள்ளன.

அதனால், நீட் தேர்வு மூலம்  மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால், தமிழக மாணவர் களுக்கு மருத்துவக்கல்வி என்பது எட்டாக்கனியாகி விடும்.

ஆகவே இந்தியா முழுவதும் ஒரேநிலையான பாடத்திட்டம் கொண்டுவந்த பிறகே நீட் போன்ற அகில இந்திய அளவில் நடைபெறும் பொது நுழைவு நடத்தப்பட வேண்டும்.