கொழும்பு:

லங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேரையும் விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ராமேஸ்வரம் – தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்கோ என்ற மீனவர் பலியானார்.

இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நடக்கும், “இந்திய பெருங்கடல் ரிம் கழகத்தின்” (ஐ.ஓ.ஆர்.ஏ) இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி சென்றுள்ளார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் மீனவர் கொலை குறித்து அன்சாரி பேசினார்.

இதற்கிடையே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை எந்தவித துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தவில்லை என்றும், அதே நேரம் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நட்டு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இன்று முன்னிரவு, தமிழக மீனவர் கொல்லப்பட்டது குறித்து இலங்கை தலைநகர் கொழும்பிவில் உயர் மட்ட ஆலோசனை நடந்தது. அதில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேரையும் விடுவிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதை அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் அறிவித்தார்.

அதே நேரம் இலங்கை அரசின் வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் 128 படகுகள் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.