வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மலைபிரதேசம் என்பதால், 50 சதவீதத்துக்கு மேல் வனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த வனங்களில் யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரத்துவங்கியது. இதுபோன்று வன விலங்குகள், மக்கள் வாழும் பகுதிக்கு வரும்போது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் சேதம் ஏற்படுகிறது. விவசாய நிலங்களையும் விலங்குகள் துவம்சம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீப காலமாக காட்டு யானைகள், கரடி மற்றும் காட்டெருமை போன்ற விலங்குகள் தாக்கப்பட்டு பலரும் உயிரிழந்து வருகின்றனர். மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த மோதல்களை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், நாளுக்குநாள் மனித, விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக, தற்போது நோட்டீஸ் அச்சிடப்பட்டு வனத்தை ஒட்டியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்த நோட்டீஸ்கள் அனைத்து வனச்சரக அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், பொதுமக்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
அந்த நோட்டீசில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விளைநிலங்களை காவல் காக்கும் பணியில் இைளஞர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். விளைநிலங்களுக்கு போதிய சூரியவெளிச்சம் இருக்கும்போதே சென்று வரவும். இரவு நேரங்கள் மற்றும் அதிகாலையில் தனியாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள விளைநிலங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதிகளை திறந்த வெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டுக் கழிவுகள், உணவு கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை குப்பை தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். வனத்திற்கு அருகில் குப்பைகளை கொட்ட வேண்டாம். இது தமிழ்நாடு வனச்சட்டம் 1882ன்படி தண்டனைக்குரியது.

இரவு நேரங்களில் வெளியில் செல்லும்போது டார்ச்லைட் போன்ற உபகரணங்களை எடுத்துச் செல்லவும். வனப்பகுதிகளின் அருகில் உள்ள விவசாயிகள் பழவகை நாற்றுக்களை தாங்கள் நிலங்களில் பயிரிடுவதால், அந்த வாசனையை நுகர்ந்து அறுவடை காலங்களில் விலங்குகள் தோட்டத்திற்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற சமயங்களில் வன விலங்குகள் நடமாட்டத்தினை விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். விலங்குகள் தென்பட்டால், உடனடியாக இலவச தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும். வன விலங்குகளை ஈர்க்கும் பயிர்களை தவிர்த்து மாற்று பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகள், விவசாய நிலங்களுக்கு வந்தால், அைவகளை துன்புறத்த வேண்டாம். புகைப்படம் எடுக்கும் (செல்பி) முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சட்ட விரோதமாக மின்வேலி அமைக்க வேண்டாம். வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால், உடடியாக 1800 4253968 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு வனத்துறையினருக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த நோட்டீசில் வனத்துறையினர் தெரிவித்துள்னர்.