சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்த ஆளுனர் வித்யாசாகர்ராவ் 15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து  கடந்த 18ந்தேதி சபை கூட்டப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்புக்கேட்டு திமுக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மைக்குகள் உடைக்கப்பட்டன.

இதனால் சபை இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் அமளி நீடித்ததால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  வெளியேற்றப்பட்டனர்.  அ.தி.மு.க. கட்சியின் இரண்டு அணிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருந்த நிலையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.  ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 11 பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது,

இந்நிலையில், அவையில் நடந்த சம்பவம் குறித்த விவரங்களை தன்னிடம் கொடுக்கும்படி சட்டசபை செயலாளருக்கு ஆளுனர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட அறிக்கையை ஆளுனர்  வித்யாசாகர் ராவிடம் கடந்த 20 ம் தேதி சட்டசபை செயலாளர் கொடுத்தார். இதையடுத்து சட்டசபையில் 18ந்தேதி நிகழ்வுகள் குறித்த அறிக்கையை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிவைத்துள்ளார்.