சென்னை:
மிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், படிப்படியாக தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் ஏசியினால் வேகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் கூறியதால், ஏசியை பயன்படுத்த தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல, பேருந்துகளில் ஏசியை பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு ஏசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கும் ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம். அதுவும் 24 – 30 டிகிரி செல்சியஸ் அளவிலேயே ஏசி வசதியை பயன்படுத்த வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 702 ஏ.சி. அரசு பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.