ஜெ மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 9வது முறையாக நீட்டிப்பு..!

சென்னை:
றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 25.9.2017 தேதியன்று விசாரணை கமிஷன் தொடங்கப்பட்டது. அதன்படி விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கையை ஆங்கிலத்திலும் தமிழிலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட 37 மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் இன்னமும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து, அறிக்கை வரவில்லை. அறிக்கையைப் பெற்று அதன் மேல் நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, ஒவ்வொரு காலகட்டத்திலும் கமிஷன் நீட்டிப்பு மட்டுமே நடந்து வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ”உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை தொடுத்த மேல்முறையீட்டு விசாரணை தாமதமாவதை தமிழக அரசின் வழக்கறிஞரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்” என விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் பகிரங்க குற்றசாட்டை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 9 வது முறையாக கால நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் முதல் குற்றவாளி என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் குற்றம் சாட்டப்பட்ட துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், 20.12.2018 அன்று ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. அந்த அழைப்பாணையை ஏற்று அவர் கடந்த 22 மாதங்களாக விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.