மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும்! தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த  அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கான தேதிகளும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதே சமயத்தில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம்  மேயர் தேர்ந்து எடுக்கப்படுவார் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து இருக்கிறது. அதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

1996ம் ஆண்டு மேயர் பதவிக்கு முதல்முறையாக நேரடி தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் 2006ம் ஆண்டுவரை மறைமுக தேர்தலாக மாற்றப்பட்டது. 2011ம் ஆண்டு அதிமுக அரசு மேயர் தேர்தலை நேரடி தேர்தலாக அறிவித்தது.