டில்லி:

த்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அத்துடன் மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வருகிறது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி  6வாரக்காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், கெடு கடந்த மாதம் 29ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காததால்,  மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

இந்த வழக்கை 9ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்தது.

அதுபோல,  மத்திய அரசு சார்பில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனுவும் இன்று விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி இந்த இரு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இன்றைய விசாரணையில் மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம்  ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த சொல்லுமா?  அல்லது மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று வழக்கை தள்ளிவைக்குமா? என்பது தெரிய வரும்.