ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.  இது வெறும் ஆடம்பரமாக அமைந்துவிடுமோ என்று தனது அச்சத்தைத் தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.

அவர் தனது முகநூல் பக்ககத்தில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

“ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை வழங்கும் தமிழக அரசுக்கு அந்த இருக்கையை நிர்வகிப்பதில் ஆலோசனை வழங்கக்கூட உரிமை இருக்கப்போவதில்லை. தமிழக அரசு வெறும் donor மட்டுமே.

சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கித்தான் தமிழ் எல்லாவற்றையும் உருவாக்கிக்கொண்டது, தமிழ்ச் செவ்வியல் இலக்கிய நூல்கள் யாவும் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு குழு திட்டமிட்டு உருவாக்கியவைதான் – என்பன போன்ற ஆய்வுகளைத்தான் .

ஷெல்டன் பொல்லாக், ஹெர்மன் டீக்கன் போன்ற அயல்நாட்டு அறிஞர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர். மாக்ஸ்முல்லர் காலத்திலேயே துவங்கிவிட்ட இந்தத் தமிழ் அழிப்புப்பணியில் இப்போது மூர்க்கமாக முன் நிற்பவர் ஹெர்மன் டீக்கன். அவரைப்போன்றோர் செய்யும் ‘நற்பணிக்கு’ தமிழ்நாட்டில் உள்ள தமிழறிஞர் இரா.நாகசாமி போன்றோர் உதவியாகக் கருத்துகூறி வருகின்றனர். அப்படிப்பட்ட ஆய்வுகள் ஹார்வர்டு தமிழ் இருக்கையில் நடைபெறாது என எவரேனும் உறுதியளிக்கமுடியுமா? சமஸ்கிருதமே தொன்மையானது அதிலிருந்து நகல் செய்யப்பட்டதே தமிழ் இலக்கணம் என்பதுபோன்ற ஆய்வுகளைத்தான் அங்கே மேற்கொள்வார்களெனில் அதற்குத் தமிழக மக்களின் பணத்தை ஏன் தாரை வார்க்கவேண்டும்?

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஆடம்பரமாகக் கொண்டாடுவதற்கு பல கோடிகளைச் செலவிடும் தமிழக அரசு எம்ஜிஆரால் துவக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் நிதி இல்லாமல் திண்டாடுவதை வேடிக்கை பார்க்கலாமா?
செல்வி ஜெயலலிதா அவர்கள் ஒப்புதல் அளித்த 16 கோடி நிதியை இப்போதாவது வழங்கலாமில்லையா?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முழுநேர இயக்குனர் இதுவரை நியமிக்கப்படவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்கலாமில்லையா?

இவற்றைச் செய்யாமல்  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்  இருக்கை நிறுவ 10 கோடி அளிப்பது வெற்று ஆடம்பரமாகவே முடிந்துவிடும் ஆபத்து உள்ளது.இதைத் தமிழக அரசும் குறிப்பாக அமைச்சர் பாண்டியராஜன் அவர்களும் கருத்தில்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.