ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறது தமிழக அரசு!:  மக்கள் அதிகாரம் அமைப்பினர் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக மக்கள் அதிகார மையம் அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

இதுகுறித்து அந்த அமைப்பு நிர்வாகிகள் சென்னையில், இன்று மாலை  செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“நான்கரை லட்சம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலை கூடாது என்று எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளனர். பாரதிய ஜனதா மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து போராடி வருகின்றனர். இந்த ஆலையை மூடுவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு, தூத்துக்குடி மாநகரத்தில் காற்று மாசு மற்றும் நச்சுத்தன்மை குறைந்துள்ளது என்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதன் மூலம்  ஸ்டெர்லைட் மூலமாகத்தான் தூத்துக்குடியில் நச்சு மாசு ஏற்பட்டுள்ளது என்பது உறுதியிருக்கிறது.

13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஒரு தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவது என்பது காலனியாதிக்க காலகட்டத்தில் கூட நடைபெறாத செயல்.  ஸ்டெர்லைட் ஆலையில் மக்கள் சாப்பிட நெல் விளையவில்லை. தவிர தனது உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறது வேதாந்தா குழுமம். இதற்கு தமிழக அரசு ஆதரவாக இருக்கத் தேவையில்லை.

தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செயல்படுவதாக கூறுகிறது. ஆனால் சென்னையில், திருச்சியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக தடை விதிக்கிறது.

வாட்ஸ்அப் மூலமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செய்தி அனுப்பினால் கூட காவல்துறை சம்மன் அனுப்புகிறது. கருப்பு துணி வாங்க ஜவுளி கடைக்கு சென்றால் கூட, ஜவுளி கடை உரிமையாளரை போலீசார் அடித்து இழுத்துச் செல்கிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆட்சிதான் நடைபெறுகிறதா, தமிழக அரசு ஆட்சி நடைபெறுகிறதா? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதில் தீவிரமாக செயல்படுபவர்களின் பெயர்களை ரவுடி பட்டியலில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.   இதன்மூலம் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பது அம்பலமாகிவிட்டது. அங்கு இந்திய சட்டம் எதுவுமே செயல்பாட்டில் இல்லை. மூடப்பட்டுள்ள காலகட்டத்தில் கூட ஸ்டெர்லைட் ஆலை, மக்கள் மத்தியில் மூளைச்சலவை செய்யும் வேலையிலும், பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் வேலையிலும் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது” என்று மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் குற்றம்சாட்டினார்கள்.