அரசுஊழியர்கள் போராட்டம்: ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை

சென்னை:

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து உள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நோட்டீஸ் அனுப்புமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழகஅரசின்  வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில்,  வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகள், அலுவலகங்கள், நிறுவனங் களில் பணிகள் பாதிக்காதவண்ணம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதேபோல, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தவறினால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீசில் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்க வேண்டும் என்றும் அத்துடன்  நோட்டீசின் மாதிரி வடிவமும் இணைத்து அனுப்பப்பட்டு உள்ளது.