சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து  அந்த கடைகள் மூடப்பட்டன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டன.

இந்த கடைகள் பலவற்றை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது. தவிர,  பல இடங்களில் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு பல மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.

இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே மதுபானக்கடைகளை திறக்க தடை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.  மேலும், அதுபோன்று திறக்கப்பட்ட கடைகளை மூடவும் உத்தரவிட்டது.

இதையடுத்து  ‘டாஸ் மாக்’ நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள்,  டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும் இணைப்புச்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக்கடைகள், 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் பகுதிகளில் செல்லும் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் அதனை ஒட்டிச்செல்லும் இணைப்பு சாலைகளில் இருந்து 220 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பார்களை உடனடியாக மூட வேண்டும்.

இதை, 30-ந்தேதி (இன்று) உறுதி செய்து டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6,729 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில், படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்ற மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் அறிவித்திருந்த்தை தொடர்ந்து, 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.

இதற்கிடையே, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் அருகே இருந்த மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. இதுபோன்ற நடவடிக்கைகளினால், மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,929 என்ற அளவுக்கு குறைந்தது.

இந்த நிலையில், நகரங்களில் நெடுஞ்சாலைகளின் அருகேயுள்ள மதுக்கடைகளை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம்  அளித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 1,700 மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தற்போது, இந்த மதுக்கடைகளை இனம்கண்டு உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 1,300 மதுக்கடைகள் மூடப்பட்டன.

சென்னை மண்டலத்தை பொறுத்தவரை, வடசென்னையில் 8, மத்திய சென்னையில் 15, தென்சென்னையில் 18, திருவள்ளூர் மேற்கில் 8, திருவள்ளூர் கிழக்கில் 59, காஞ்சீபுரம் வடக்கில் 33, காஞ்சீபுரம் தெற்கில் 15 என மொத்தம் 156 மதுக்கடைகளும், சேலம் மண்டலத்தில் 122 மதுக்கடைகளும் என மொத்தம் 1,300 கடைகள் மூடப்பட்டன.

ஆனால், மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவதற்கான கொள்கையை உருவாக்க அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், அவர்களுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.