மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலத்தில் சரளமாக தங்கள் திறனை வெளிப்படுத்தவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 90 நிமிடத்துக்கான ஒரு பாடவேளையில் 40 நிமிடங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கு ஒதுக்கவும், 6ம் முதல் 9ம் வகுப்பு வரை 45 நிமிடத்துக்கான பாடவேளையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடக்கிறதா என்பதை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.