மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது குறித்து, 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல மாநகராட்சிகள், நகராட்சிகளில்  சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதிய உயர்வோ, பணி உயர்வோ வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக  ஆயுஷ் மருத்துவர்கள்  15 பேர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது மனுவில்,  நாங்கள் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானியில் பட்டம் பெற்றுள்ளோம். கடந்த 1989 முதல் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

அலோபதி மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கி 2010-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அலோபதி மருத்துவர்கள் நிலையில் தான் நாங்களும் பணிபுரிந்து வருகிறோம். எனவே, எங்களுக்கும் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு வழங்க நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மனு அனுப்பினோம். எங்கள் கோரிக்கையை அரசுக்கு ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

ஆனால், இதுவரை அரசு எங்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு அறிவிக்கவில்லை. 2010 வரைஇந்திய மருத்துவ முறை மருத்துவர்களும், அலோபதி மருத்துவர்களும் ஒரேவிதமான ஊதியம் பெற்றோம். தற்போது அலோபதி மருத்துவர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமலும், குறைந்த ஊதியத்திலும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். எங்களில் பலர் 25 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். எனவே இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை  நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தது வந்தார். தொடர்ந்து, மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான நகராட்சி நிர்வாக ஆணையரின் பரிந்துரையை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் 3 மாதத்தில் பரிசீலித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.