குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, “தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையோ அல்லது சட்டமன்றத்தையோ கூட்டி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க, அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். அமைச்சர்களும், முதலமைச்சரும் இதில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது என்பதை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். பணம் கொடுத்தும், நல்ல தண்ணீரை கூட மக்களால் வாங்க முடியாத நிலை உள்ளது. தமிழகம் இதுவரை இது போன்ற வறட்சியை சந்தித்தது இல்லை. இதை அரசியலாக பார்க்காமல், பொது பிரச்சனையாக கருதி மக்களின் தாகத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.