மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:

மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து மு.க. ஸ்டாலின் கூறுகையில், ‘‘மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 12-ம் வகுப்பு பொது தேர்வில் அவர் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவருடைய கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 196.5 ஆகும். நல்ல மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கல்லூரியில் கட்டாயம் படிக்க கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வால் அவருடைய வாய்ப்பு பறிபோகும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டு வரையில் சென்று போராடினார். அனிதா மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் என்னை சந்தித்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினார்கள்.

அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அடுத்த நாளே சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். பல முயற்சிகளுக்குப் பிறகும் அவருடைய கனவு நிறைவேறாமல் போனதால் இப்படிப்பட்ட முடிவை எடுத்துவிட்டார்.

மாணவர்கள் யாரும் இப்படிப்பட்ட விபரீதமான முடிவை எடுக்க வேண்டாம். அனிதாவின் தற்கொலை எந்த சந்தேகமும் இல்லாமல் நீட் தேர்வு பாதிப்பால் நடந்ததுதான் என்றும், தமிழகத்தில் அரசு அரசாக இருந்தால்தானே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.