சென்னை:

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில்,  டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு சுறுசுறுப்பு காட்டி வருகிறது. களத்தில் 3ஆயிரம் ஊழியர்களை களமிறக்கி உள்ள, வீடுகள் தோறும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க 3 ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்களை களமிறக்கி உள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மீண்டும் டெங்கு காய்ச்சல் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் சுகாதாரத்துறையும், உள்ளாட்சித்துறையும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றன. அதே சமயம், அரசின் புள்ளிவிபரங்கள் நம்பகமாக இல்லை என்று விமர்சிக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 160 பேர் காய்ச்சலும் 38 பேர் டெங்கு பாதிப்பாலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், 139 பேர் காய்ச்சலாலும் 39 பேர் டெங்குவாலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 110 பேர் காய்ச்சல், 14 பேர் டெங்கு பாதிப்புடன் உள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 80 பேருக்கு காய்ச்சலும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பும் உள்ளது. இவர்கள் சென்னை மட்டுமல்லாது அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்துள்ளார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒன்பது மாதங்களாக 390 பேர் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த மாதம் மட்டும் 90 பேருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9% அதிகம்.

அதுபோல தமிழகம் முழுவதும், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம்,  கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கோவை அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் சிகிச்சையும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கிறார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,486 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 13 பேர் டெங்குவுக்கு பலியாகியிருந்தனர். 2017-ம் ஆண்டில் 23,294 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகி 65 பேர் இறந்துள்ளனர். 2016-ம் ஆண்டில் 2531 பேர் பாதிப்பு 5 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 4535 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 12 பேர் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டு மே மாதம் வரை 951 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்போது 2,500க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே டெங்கு பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த மாத இறுதியில் மூன்று குழந்தைகள் டெங்கு பாதிப்பால் இறந்ததாக தெரியவந்தது. தற்போது வரை சென்னையில் 6 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,தற்போது டெங்குவை கட்டுப்படுத்த 3346 சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. 7 மெகா டீம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 39 வாகனங்களில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொசுமருந்து அடிக்கும் செயலில் 395 பேர் ஈடுபட்டு உள்ளதாகவும்,  இரு ஷிப்டுகளாக பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் நோக்கில், இதுவரை 8929 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், 387 பொது மருத்துவமனைகள், 652 தனியார் மருத்துவமனைகள், 1736 அரசு கட்டிடங்கள், அலுவலகங்கள், 25,334 காலி இடங்கள்,  55520 மூடப்பட்ட வீடுகள் உள்பட ஏராளமான இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றுள்ளதாகவும்  தெரிவித்து உள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி சார்பில், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் மற்றும்  பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளது. தற்போதைய பருவ மழை காலத்தில் 763 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 73 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, டெங்கு காய்ச்சல் தொடர்பாக 1326 மெடிக்கல் கேம்ப் நடத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

டெங்கு கொசு ஏற்படும் வகையில் பராமரிப்பின்றி கட்டிங்கள்  தண்ணீர் தேங்கும் வகையில் வைத்திருந்ததாக ஏராளமானோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனையில் முதல்கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதையடுத்து அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்வதாகவும் தெரிவித்து உள்ளது.

டெங்குவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு தொடுத்த வழக்கில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தரவுகள் கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வழக்கில் தமிழக அரசு கொடுக்கவுள்ள பதில் என்ன என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.