முகக்கவசம், சோப், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: முகக் கவசம், சானிடைசர், சோப்புகள் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக மக்கள் பயணம் செய்யும் பொழுது விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிகவளாகங்கள், திரையரங்குகள், பொதுவாக மக்கள் கூடும் இடங்களில் நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிந்து வருகின்றனர்.

நோய் தொற்றினை தவிர்க்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் சுகாதார அறிவுரைகளை அலைபேசி வாயிலாக விளம்பரம் செய்து அடிக்கடி கைகளை சோப், திரவ வடிவிலான சோப், சானிடைசர் போன்றவற்றை கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.

அதன் காரணமாக இப்பொருட்கள் சந்தையில் அதிக தேவை ஏற்பட்டிள்ளதை கருத்தில் கொண்டு சில விற்பனையாளர்கள் இப்பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக தெரிகிறது.

எனவே முகக்கவசம், சோப், திரவ சோப், சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் கண்டெய்னர், பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் பொழுது சட்ட முறை எடையளவு விதிகள் 2011-ன் படி அந்த பாக்கெட்டுகளில் தயாரிப்பாளர்கள் / பேக்கர் முழு முகவரி, பொருளின் அளவு அல்லது எண்ணிக்கை, நிகர எடை / அளவு பொருள் தயாரிக்கப்பட்ட மாதம் / வருடம், காலாவதியாகும் மாதம்/ வருடம் அதிகபட்ச / சில்லரை விற்பனை விலை ( அனைத்து வரிகள் உட்பட) புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் இமெயில் முகவரி ஆகியவற்றினை தெளிவாக பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை மீறி பொட்டலமிடுபவர்கள் மீதும் பொருளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு அதிகமாக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மேற்கண்ட பொருட்களில் குறிப்பிட்டுள்ள விற்பனை விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்கள், கடைகள், மருந்துக்கடைகள் போன்றவை குறித்து புகாரளிக்க தொழிலாளர் துறையினரால் நுகர்வோர் நலன் கருதி செயல்பட்டு வரும் TNLMCTS (Tamilladu Legal Metrology Complait Tracking System ) என்ற மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து புகார் தெரிவிக்கலாம் அல்லது clmchennai.tn@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவோ அல்லது 044-24321438 என்ற தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.