சென்னை: கடந்த 2013-14 மற்றும் 2017-18 ஆகிய காலகட்டங்களில் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.22 லட்சம் கோடியை தமிழ்நாடு அரசு முறையாகப் பயன்படுத்த தவறிவிட்டது என்று கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மோசமான பட்ஜெட் நிர்வாகமே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017-18ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.28029 கோடி‍யை மாநில அரசு ஒப்படைத்ததாகவும், கடந்த 5 ஆண்டுகளில் அதுவே அதிகபட்சமான தொகை என்றும் சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டு காலத்தின்போது, ஒட்டுமொத்த ஒதுக்கீட்டுத் தொகை ரூ.1012893 கோடி. ஆனால், அதில் செலவழிக்கப்பட்ட தொகையோ ரூ.891821 கோடி. ஒரு ஆண்டிற்கு சராசரியாக திரும்ப ஒப்படைக்கப்பட்ட தொகை ரூ.24502 கோடி.

தமிழகத்திலுள்ள 37 துறைகளில் ஒவ்வொன்றும் கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மை செயலாளர், செயலாளர்கள் ஆகியோரைக் கொண்டவை. அவை அளிக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு துறைக்கான ஒதுக்கீடு முடிவு செய்யப்படும். கடந்த 2017-18 காலகட்டங்களில் மொத்தம் 54 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.