16 மாவட்டங்களின் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட உத்தரவிட்ட தமிழக அரசு!

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களின் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனைச் சாவடிகளில், நோய் கண்காணிப்பு பணிகள் & தூய்மைப் பணிகளை போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றைச் சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகின்ற மக்களுக்கு நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்கள் மக்கள் கூடும் இடங்களை நோக்கி வருவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் நிர்வாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.