சென்னை

ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு எந்த தனியார் மருத்துவமனைக்கோ, அல்லது பரிசோதனை நிலையத்துக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஜிகா வைரஸ் என்பது ஏடஸ் எகிப்தி கொசுக்களின் மூலம் பரவுகிறது.  இந்த கொசுக்கள் தேங்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்து வருகிறது.   தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்கி உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

ஜிகா வைரஸ் தாக்கியதாக கூறப்படுபவர், ஜுரம் மற்றும் உடல்வலிக்காக அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வந்தார்.  அவருக்கு டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களுக்காக பரிசோதனை செய்யப்பட்டது.  ஆனால் அந்த நோய்கள் அவருக்கு இல்லை என தெரிந்ததால் பூனேவில் உள்ள வைரஸ் பரிசோதனை நிலையத்துக்கும், மணிப்பாலில் உள்ள வைரஸ் பரிசோதனை நிலையத்துக்கும் இரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டது.   அங்கு அவர் ஜிகா வைரசால் தாக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  தற்போது அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.

இதை தொடர்ந்து பல தனியார் மருத்துவமனைகளும், பரிசோதனைக் கூடங்களும் இந்த வைரஸை கண்டறியும் பரிசோதனைக்கு அனுமதி வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளன.  ஆனால் அரசு எந்த ஒரு தனியாருக்கும் இந்த பரிசோதனைக்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை.  ஏற்கனவே தேவையற்ற பரிசோதனைகளை பல தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு செய்து பணம் பிடுங்குவதாக வந்த புகார்களே இந்த அனுமதி வழங்காதமைக்கு காரணம் என ஒரு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, “இப்போது தனியாருக்கு இந்த சோதனை செய்ய அனுமதி வழங்க தேவை இல்லை.  எடுத்தவுடன் ஜிகா வைரஸ் சோதனை செய்யக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.  ஜுரம், களைப்பு, உடல்வலியுடன் வருபவர்களுக்கு, முதலில், டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும்.  டெங்கு மற்றும் சிக்கன்குனியாவின் அறிகுறிகள் காணப்பட்டு ஆனால் பரிசோதனையில் அது நிரூபணம் ஆகவில்லை என்றால் மட்டுமே ஜிகா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும்.” என கூறி உள்ளார்.

”ஆம்.  சாதாரண தலைவலிக்கே ஃபுல் பாடி ஸ்கேன் செய்யும் பல தனியார் மருத்துவமனைகளிடம் இந்த அனுமதியும் கிடைத்தால், நாட்டில் உள்ள அனைவரும் ஜிகா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்” என பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அரசு மருத்துவர் தெரிவித்தார்