ஈட்டிய விடுப்பைத் தொடர்ந்து அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும் பறித்தது தமிழக அரசு…

சென்னை:
மிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூலை வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
ஏற்கனவே ஈட்டிய விடுப்பு (சரண்டர் லீவு) ஒராண்டுக்கு  நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அகவிலைப்படியிலும் கை வைத்துள்ளது.  இதன் காரணமாக அரசு ஊழியர்களின் ஓராண்டு சம்பள உயர்வு தமிழகஅரசால் பறிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, அடுத்த ஆண்டு (2021)  ஜூலை 1 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
2020 ஜன.,1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வும் நிறுத்திவைக்கப்படுகிறது. இருப்பினும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.  நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பிற்காலத்தில் வழங்கப்படாது.
இந்த உத்தரவானது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், யுஜிசி மற்றும் அகிலஇந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு மற்றும் அரச உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு டிப்ளமோ அமைப்புகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள், நூலகர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், குழந்தை நலத்துறை அமைப்பு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம பஞ்சயத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.
இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு நிறுத்திவைப்புதமிழக அரசு பிறப்பித்த மற்றொரு உத்தரவில்,
ஆண்டுதோறும், அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு சம்பளம் பெறுவார்கள். இந்நிலையில், கொரோனாவால் தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஒராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்திவைக்கப்படுகிறது.
மாநில நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைகழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும், அதுவும் நிறுத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், அரசு ஊழியர்கள் விடுமுறையை எழுதி கொடுத்து அதற்கான சம்பளத்தை பெறுவார்கள்.  அதற்கும் ஆப்பு வைத்துள்ளது தமிழகஅரசு.
அரசு ஊழியர்களின் சலுகைகளில் அடுத்தடுத்து தமிழகஅரசு கைத்துள்ள விவகாரம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.