சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக, மொத்தம் 49 இஸ்லாமிய அமைப்புகளுடன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் காவல்துறை இயக்குநர் திரிபாதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

சிஏஏ எனப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, முஸ்லிம் சமூகத்தினரிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்க, தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் இன்று (மார்ச் 14) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் தவிர, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், முஸ்லீம்கள் சார்பாக, தலைமை ஹாஜி சலாவுதீன், ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், மனிநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 49 இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.