தமிழக பள்ளி ஆசிரியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

சென்னை

மிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசிடம் சில கோரிக்கைகள் வைத்தனர். அவை, “கடந்த 2003 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதிக்கு மேல் பணியில் சேர்ந்தோருக்கு புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமுல் படுத்த வேண்டும். மாநில பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும்.

பல்வேறு துறைகளில் உள்ள ஆசிரியர் மற்றும் உள்ள ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். சத்துணவு மையம், அங்கன்வாடி, கிராமப்புற வருவாய்த்துறை ஊழியர்கள், தொகுப்பு ஊதியம் பெறும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கல் அக்கியோருக்கு ஊதிய வரைமுறை, நிலுவையில் உள்ள 21 மாத ஊதியம் வழங்கல்” உள்ளிட்ட 9 அம்சங்கள் இடைபெற்றுள்ளன

இது குறித்து பல கட்ட போராட்டங்கள் நடந்தன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரபட்ட வழக்கு மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க தொடர்ந்து கால அவகாசம் கோரி வந்தது. இதனால் மேற்கொண்டு கால அவகாசம் அளிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதை அடுத்து ஏற்கனவே தீர்மானித்த படி இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் 56 ஆசிரியர் சங்கங்களும் 200 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களும் கலந்துக் கொள்கின்றன. இன்று காலை 10 மணி முதல் இந்த வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது.

இதை ஒட்டி நேற்று அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்ட அறிவிப்பில், “பணிக்கு வராத ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது. அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பை தவிர மற்ற விடுப்பு எடுக்க அனுமதி இல்லை. இன்று காலை 10.15 மணிக்கு முன்பாக இது குறித்த தக்வல்களை தலைமைச் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் திட்டமிட்டபடி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மணவர்கள் சார்பில் அரும்பாக்கத்தை சேர்ந்த கோகுல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை அளித்தார்.
அதை நேற்று விசாரித்த நீதிபதி ராஜா, “உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால் இங்கு இன்னொரு வழக்கை விசாரிக்க முடியாது. போராட்ட அறிவிப்பு பல நாட்களுக்கு முன்பே வெளியாகி உள்ள நிலையில் இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள்? கடைசி நேரத்தில் வழ்க்கு தொடர்ந்தால் தடை ஏதும் விதிக்க முடியாது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுகளை அளித்தால் நாளை (அதாவது இன்று) விசாரணை செய்கிறேன்” என தெரிவித்தார்.