தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் 

--

தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி யிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கடுமையாகத் தாக்கியது.  புயல்-மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் அப்பகுதி  மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

இந்தநிலையில் வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.  இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளதாவது:
“தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து 20-ம் தேதி (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட்டி நிலைகொள்ளும்.

இதனால் 19-ம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.  வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழை அல்லது மிக கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு.  தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.  அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

20 மற்றும் 21-ம் தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் கன மழை அல்லது மிக கன மழை பெய்யக்கூடும். தென் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் கன மழை பெய்யும்.

மீனவர்கள் 19-ந் தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 20-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக் கூடும். 19  மற்றும் 20-ம் தேதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போதைய நிலவரப்படி புயலாக உருவெடுக்க வாய்ப்பு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 3 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கோலப்பாக்கம், திருத்தணியில் தலா 2 செ.மீ. மழையும், சேலம், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், செங்கத்தில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.