நீர் மேலாண்மை செயல்பாடுகள் – 13வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்!

--

புதுடெல்லி: நீர் மேலாண்மை திட்ட செயல்பாடுகளில் தமிழகத்தின் செயல்பாடு மேம்பட்டு, தேசியளவில் 33வது இடத்திலிருந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய ஜலசக்தி அமைச்சகம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, மாநிலங்களின் நீராதார நிர்வாகம், வறட்சி & வெள்ளநீர் மேலாண்மை, கால்வாய் மற்றும் அணைகளில் நீர்க்கசிவைத் தடுப்பது உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குடிநீர் கொள்முதல், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தகவல்களை உடனடியாக பதிவேற்றும் வசதி, தகவல்களை மின்னணுமயமாக்குதல், பகுப்பாய்வு பணி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் மாநிலங்கள் மேற்கொள்ளும் சிறப்பான செயல்பாடுகளின் வரிசையில் தரவரிசை வழங்கப்படுகிறது.

அந்தவகையில், குஜராத் மாநிலம் நல்லமுறையில் செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இப்பட்டியலில், 33வது இடத்திலிருந்த தமிழ்நாடு தற்போது 13வது இடத்திற்கு முன்னேறி ஏற்றம் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.