குஜராத்தைவிட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவே சிறந்த மாநிலங்கள்!: புள்ளி விவரத்தோடு விளக்கும் ப.சி.


குஜராத்தைவிட தமிழகமும், கேரளாவும் சமூக பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை அவர் ஏற்கனவே ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பதிவில் புள்ளி விவரங்களோடு மீண்டும் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

அதில் ப.சி. தெரிவித்துள்ளதாவது:

“2014 பாராளுமன்ற தேர்தலின்போது,  பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அச்சேதின் வருகிறது என்று,  ஒரு ஸ்லோகனை முன் வைத்து, வருடத்துக்கு  2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகக் கூறினார். மேலும், கருப்பு பணத்தை மீட்டு எடுத்து ஒவ்வொருவர் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

எதிர்பார்த்தபடியே, மோடியின் மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவரது 42 மாத கால ஆட்சியில் ஏமாற்றமே பரிசாக கிடைத்திருக்கிறது.  அதேபோன்ற ஏமாற்றம் குஜராத்திலும் ஏற்பட்டுள்ளது.  குஜராத் மாடல் என பிரபலப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.


1995ம் ஆண்டுக்கு முன்னரே குஜராத்தின் வளர்ச்சி விகிதம், தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகத்தான் இருந்தது. அமுல், துறைமுகங்கள், சிறப்பான ஆடை தொழில்கள், கெமிக்கல் தொழில்கள் போன்றவையெல்லாம் 1995க்கு முன்பே துவங்கப்பட்டுவிட்டன. இந்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் குஜராத் மக்கள்தான்” என்று ப.சி. தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு புள்ளிவிபர பட்டியலையும்  இணைத்துள்ளார்.

 

குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களின் கல்வி, சராசரி ஆயுள், பாலின விகிதம், குழந்தை இறப்பு விகிதம், சமூக செயல்பாடுகளுக்கான செலவீனம் போன்றவற்றை ஒப்பிட்டு குஜராத்தான் இம்மாநிலங்களைவிட பின்தங்கி இருக்கிறது  என்பதை விளக்கியுள்ளார் சிதம்பரம்.