இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகள் இருப்பது தமிழகத்தில்தான்! தலைமைநீதிபதி தகில் ரமணி

சென்னை:

ந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகள் இருப்பது தமிழ்நாடு என்று சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமணி கூறினார்.

மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிபதி சொக்கலிங்கம் நூலகம் மற்றும் ஏசி  அரங்கம் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு அரங்கத்தை திறந்த வைத்து சென்னை உயர்நீதி மன்ற தலைமைநீதிபதி தகில் ரமணி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது,  முன்பெல்லாம் பெண் வழக்கறிஞர்கள் பணிபுரிவதில் மிகுந்த சிரமம் இருந்தது.ஆனால்,  தற்போது அந்த சிரமங்கள் நீங்கி, ஆண் வழக்கறிஞர்களுக்கு சமமாக பெண் வழக்கறிஞர்களும் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும், நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அதிக அளவில் பெண் நீதிபதிகள் பணியாற்றுகிறார்கள் என்றும் இது இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

இந்த விழாவில் மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார், ஜி.ஆர். சுவாமிநாதன் உள்பட பல நீதிபதிகள் கலந்துகொண்டனர்.