சென்னை:

தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் தமிழகம் என்று சென்னை நந்தம் பாக்கம் டிரேடு சென்டரில் நடைபெற்று வரும் 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார்.

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள  2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய தொழிலதிபர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில்,  பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, தமிழகம், தொழில் செய்ய உகந்த மாநிலமாகவும், திறமையான தொழிலாளர்களைக் கொண்ட முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து வருவதாக புகழ்ந்தார்.

தமிழகம் மின் மிகை மாநிலமாக  இருப்பதால், தொழிற்துறைக்கு சிறந்த  மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வணிகம் செய்தவர்கள் என்று கூறி யஅமைச்சர்,  தமிழக மன்னர்கள். கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இதற்கான கல்வெட்டுகள் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள கட்டடக்கலை மற்றும் ஆலயங்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் ராணுவ தொழிற்சாலையை  மத்திய அரசு அமைக்க உள்ளதாக தெரிவித்தவர்,  உலக அளவில் வளர்ச்சியிலும் தொழில் துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. மின்னணு நிர்வாகம், காலநிலை மாற்றம் ஆகியவற்றிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது.

சூரிய மின்உற்பத்தி உள்ளிட்ட தூய எரிபொருள் துறையிலும் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது.  பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் செய்த மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக, ஜிஎஸ்டி வெற்றிகரமாக  அமல்படுத்தப் பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை, ஒரே விலையாக மாற்றப்பட்டி ருக்கிறது. தொழில்துறையில் தமிழகம் முன்னேறுவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.