ஜெயலலிதா இல்ல திருமணம் என்றாலே, அவரது (முன்னாள்) வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம்தான் அனைவரின் நினைவுக்கு வரும்.
“நாளை நடக்க இருப்பதும், ஜெ.வின் வளர்ப்பு மகன் போன்றவரின் திருமணம்தான். புத்திசாலித்தனம், பொறுமை, அமைதியான சுபாவம் ஆகியவற்றால் “அம்மா”வின் குட் புக்கில் இடம் பெற்ற இவரை, அம்மாவின் செல்லப்பிள்ளை என்றே சொல்லலாம்.
அம்மாவின் செல்லப்பிள்ளை என்றாலும் திருமணம் சிம்பிளாகத்தான் நடக்க இருக்கிறது. மணமகன் விவேக்கும் விவேக்கும் சிம்பிளான மனிதர்தான்” என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.
ஜெயலலிதாவுடன் அவரது போயஸ்கார்டன் இல்லத்திலேயே வசிக்கும் இளவரசியின் மகன்தான் விவேக்.
“இன்று போயஸ்கார்டனில் கோலோச்சுபவர் விவேக்தான்” என்கிறார்கள்.

விவேக்
விவேக்

இவர் எப்படி இந்த இடத்தைப் பிடித்தார்?
இன்னும் கொஞ்சம் டீட்டெய்லாக பார்ப்போம்.
ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியின் உடன் பிறந்த சகோதரர் ஜெயராமன்.  ஜெ.வின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் இவர்.  திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் ஜெயராமனின் மனைவி இளவரசி தனது மூன்று குழந்தைகளோடு தவித்து நின்றார்.  அப்போது விவேக் கைக்குழந்தை.
அந்த நேரத்தில்தான், ‘கவலைப்படாதே… என்னுடனே இரு”  என இளவரசியை போயஸ் இல்லத்துக்கு அழைத்துக்கொண்டார் ஜெயலலிதா.
பள்ளிக் கல்வியை கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில்     முடித்த விவேக், மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றார். அங்கு  பி.பி.ஏ. ஃபைனான்சியல் அக்கவுண்ட்ஸ் படித்தார்.  இந்தியா திரும்பியவர், புனேவில் எம்.பி.ஏ படித்தார்.
இளவரசி
இளவரசி

அதன் பிறகு,  கொல்கத்தாவில் ஐ.டி.சி கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைக்கு சேர்ந்தார்.  பிறகு பெங்களூரு ஐடிசி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த சமயத்தில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவும், சசிகலாவும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  தனக்கான மருந்து, மாத்திரை, சாப்பாட்டை கொண்டுவந்து கொடுக்க  நம்பிக்கையான நபர் தேவை என்று நினைத்த ஜெயலலிதா, அதற்கான பணியல் இந்த விவேக்கை நியமித்தார்.
அந்த காலகட்டத்தில் பரப்பன அக்ரஹார சிறைக்குள் தங்குதடையின்றி சென்று வந்தது இவர்தான்.
சிறையிலிருந்து ஜெயலலிதா வெளியே வந்ததும், மீண்டும் தனது ஐடிசி கம்பெனி பணிக்கே சென்றுவிட்டார் விவேக்.
கொஞ்ச நாளில், மீண்டும் விவேக்கை அழைத்தார் ஜெயலலிதா.  ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ. வாக ஆனார் விவேக்.
இவர் பொறுப்பேற்ற தருணத்தில்தான், ஜாஸ் சினிமாஸ் பற்றிய சர்ச்சைகள் எழுந்தன. சென்னை வேளச்சேரியில் உள்ள பிரம்மாண்டமான ஃபீனிக்ஸ் மால், வாங்கப்பட்டதாகவும் சர்ச்சை கிளம்பியது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியும், விவேக் பெயரைக் குறிப்பிட்ட ஜாஸ் சினிமாஸ் குறித்து அறிக்கை வெளியிட்டார்.
ஜாஸ்
ஜாஸ்

ஆனால், பீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்கள் உட்பட அனைத்தும், லீஸ் அடிப்படையிலேயே வாங்கியதாக கணக்குகள் தயார் செய்யப்பட்டன.
“இப்படி லீஸுக்கு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டினால், பிரச்னை ஏதும் வராது. தவிர, தியேட்டரில் உள்ள பொருட்களைக் கணக்கு காண்பித்து வங்கிக்கடனும் வாங்கலாம்” என்று விவேக்தான் ஆலோசனை சொன்னாராம்.
இப்படி புத்திசாலித்தனமாக சிந்திப்பது, சரளமான ஆங்கிலம், எந்த ஒரு இடத்திலும் தனது போயஸ்கார்டன் தொடர்பை வெளிப்படுத்தாதது.. என்று ஜெ.வின் குட்புக்கில் இடம் பிடித்தார் விவேக்.
“தன் மகனைப்போலவே விவேக்கை நினைக்கிறார் ஜெயலலிதா. அவருக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டும்” என்று ஆசைப்பட்டாராம். “உறவுக்குள்ளேயே பெண் பார்க்க வேண்டும்” என்று விவேக்கின் தாயார் இளவரசி கோரிக்கை வைக்க, தேடுதல் வேட்டை நடந்தது… ஜெயலலிதாவின் அக்கறையான மேற்பார்வையில்!
திருமண அழைப்பிதழ்
திருமண அழைப்பிதழ்

பல இடங்களை பார்த்து, உறவுப்பெண்ணான கீர்த்தனா நிச்சயிக்கப்பட்டார். சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பாஸ்கர் – ஜெயா தம்பதியின் மகளான இவர் மருத்துவக்கல்லூரி மாணவி.
“தன் மகனாகவே விவேக்கை நினைக்கிறார் ஜெயலலிதா. அதே நேரத்தில் மிக எளிமையாக திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மணமகன் வீட்டாரின் விருப்பமும் அதுதான்” என்கிறது விவேக்
அதன்படி சென்னை வானகரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை எளிமையான முறையில் மணவிழா நடக்க இருக்கிறது.
உடல் நிலை காரணமாகவோ என்னவோ, ஜெயலலிதா திருமணத்திற்கு நேரடியாக வந்து வாழ்த்துவது சந்தேகம் என்கிறார்கள்.
“அதனால் என்ன… எனது அன்பும் ஆசியும் என்றும் உனக்கு உண்டு” என்று விவேக்கை பாசத்துடன் வாழ்த்தினாராம் ஜெயலலிதா.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, செப்டம்பர் 2ம் தேதி தஞ்சாவூரில் நடக்க இருக்கிறது.