ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்….! அதிர்ச்சி தகவல்

டில்லி:

ரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்தின்போது,  ஒரு நாளைக்கு 98 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி காரில் செல்பவர்கள் சீட் பெல்ட்டும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர் கள் ஹெல்மெட்டும் கட்டாயம். அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் கூறி வருகின்றன.

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பின் இருக்கையில் இருப்பவரும்  ஹெல்மெட்  கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால்  நாள் ஒன்றுக்கு 98 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

கடந்தாண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாலும்,  கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாலும்   நேரிட்ட விபத்துக்கள் குறித்து காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்ப்பில்   ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் தமிழகம் முதலிடத்தை பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த  2017 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நாள் ஒன்றுக்கு 98 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதே போல் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால்  நாள் ஒன்றுக்கு சராசரியாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். செல்போன் பேசியப்படியே வாகனத்தில் சென்றவர்களில் நாள் ஒன்றுக்கு 9 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு  மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 36,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து உயிரிழப்பில், தமிழகம் முதலிடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாம் இடத்தையும், மத்திய பிரதேசம்  மூன்றாமிடத்தை இடம்பிடித்துள்ளது.

அதே போல் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட விபத்துகளில் கர்நாடக மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது.