சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவில் நாளை ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. நாளை தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நாளை மறுநாள் புயலாகவும் வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசை நோக்கி நகரும்.
அதன் காரணமாக தென்கிழக்கு, தென் மேற்கு அரபிக்கடல் , லட்சதீவு மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடை இடையே மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்,.
எனவே இன்று முதல் ஜூன் 4 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் வீரகனுர் (சேலம்) 7 செ.மீ, வால்பாறை (கோவை), ஆலங்காயம் (வேலூர்), திருமூர்த்தி மலை (திருப்பூர்) தலா 3 செ.மீ , சூளகிரி (கிருஷ்ணகிரி) தலா 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.