பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவை தமிழக அமைச்சர்கள் 4 பேர் சந்தித்து பேசினர்.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை செங்கோட்டையன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் 4 பேர் சந்தித்து பேசினர்.

தமிழக அமைச்சர்களான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகிய 4 பேர் சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சிறைச்சாலை வாசலில் வரிசையில் நிற்கும் தமிழக அமைச்சர்கள்

இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு சென்ற அமைச்சர்கள், மதியம் 1.30 மணி அளவில் சசிகலாவை சந்திக்க சிறைச்சாலை வளாகம் சென்றனர். அங்கு சசிகலாவ சந்திக்க அனுமதி பெறுவதற்காக சிறை சூப்பிரடண்ட் அறை வாசலில் வரிசையில் நின்று அனுமதி வாங்கினர். பின்னர்  சிறைக்குள் சென்று சசிகலாவை சந்தித்தனர்.

சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்களின் அதிருப்தியையும் சம்பாதித்து உள்ளது.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு மற்றும் பாதாம், முந்திரி போன்ற விலைஉயர்ந்த சத்தான பொருட்கள்  வாங்கி சென்று கொடுத்தனர்.

மதியம் 1.23 க்கு சிறைக்குள் சென்ற அமைச்சர்கள் பிற்பகல் 2.36க்கு வெளியே வந்தனர். சுமார் 70 நிமிடம் அவருடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்தால், எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சிறை மாற்றம் குறித்து தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், சிறிது காலத்திற்கு பிறகு  தமிழகத்திற்கு மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சசியிடம் அமைச்சர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது டில்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக திட்டங்கள் குறித்து பேசி வரும் வேளையில், 4 முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.