சென்னை:

மிழக எம்எல்ஏக்களின் மாத சம்பளம் 1.05 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி அறிவிப்பை இன்றைய சட்டமன்றத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதன் காரணமாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.

மானியக்கோரிக்கை மீதான சட்டமன்ற கூட்டம் இன்றோடு முடிவடையும் நிலையில், பல அதிரடி அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

அதன்படி, பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி உள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதேபோல்,  எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை  ரூ.2.50 கோடி ஆக உயர்த்தியும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்காக எம்.எல்.ஏ.க்கள் தமிழக அரசுக்கு  நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழ்நிலையிலும், சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதை கண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில்,

மற்றொரு புறம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி வெயில் மழை பாராமல் விவசாயிகள் போராடி வரும் சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி இருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டி வரி காரணமாக சிறுகுறு தொழில்கள், வணிகர்களின் தொழில்கள் முடங்கி வரும் நிலையில், அனைத்துவிதமான அரசு சேவைகளுக்கும் லஞ்சம் வாங்கி மக்களை ஏமாற்றி வரும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 1லட்சத்து 5ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது, தமிழக முழுவதும் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சியை தக்க வைக்க, சம்பள உயர்வு என்ற பெயரில் மக்கள் பணத்தை வாரி இறைத்து, தனது அரசை காப்பாற்ற எடப்பாடி இந்த சம்பள உயர்வை அறிவித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.