நாடாளுமன்ற குழு உறுப்பினர்களாக தமிழக எம்.பி.க்கள் நியமனம்! உரத்துறைக்கான குழு தலைவராக கனிமொழி நியமனம்!

டில்லி:

எம்.பி.க்களைக் கொண்ட பல்வேறு பாராளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ள நிலையில்,  உரத்துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவராக திமுக எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டு உள்ளார்.

பல்வேறு துறைக்கான நாடாளுமன்ற குழுக்கள் அமைத்து பாராளுமன்றம் அறிவித்து உள்ளது. இந்த குழுக்களில் அதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரசா யனம் மற்றும் உரத்துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவராக திமுக எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அக்குழுவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வசந்தகுமார், விஷ்ணு பிரசாத்  இடம்பெற்றுள்ளனர்.

அதுபோல, வேளாண்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் மதிமுக பொதுசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி, அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறைக்கான நாடாளுமன்ற குழுவில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

நிலக்கரி மற்றும் எக்கு உற்பத்திதுறைக்கான நாடாளுமன்ற குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் இடம்பெற்றுள்ளார்.

மேலும் அமைக்கப்பட்டுள்ள  பல்வேறு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கதிர்ஆனந்த், டி.கே.எஸ். இளங்கோவன், கலாநிதி வீராசாமி, நவநீத கிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் பலர் இடம் பெற்றுள்ளனர்.