தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 1:

சிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

1.   எல்லாரும்தான் சொல்லட்டுமே….!

எது நமக்கு முக்கியம்…? அறிந்து இருக்கிறோமா…?

நாளை நம் வீட்டுக் குழந்தைகள் என்ன படிக்கப் போகிறார்கள்…? நாளை அவர்கள் என்னவாக வளர இருக்கிறார்கள்….? அவர்களின் எண்ணம், செயல்… எதை நோக்கி இருக்கப் போகிறது…?

இவற்றுக்கு வழி கோலுகிற பள்ளிப் படிப்பு குறித்த அடிப்படை ஆவணம், தமிழக அரசால் வெளியிடப் பட்டு ஒரு வாரம் ஆகிறது.

இந்த ஏழு நாட்களில் இதைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் கவலைப் பட்டு இருக்கிறோம்…..?

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளரைப் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்து போகிறார்கள். சினிமாத் தொழிலே அழிந்து போய் விடுகிற ‘பேராபத்து’ ஏற்பட்டு விட்டதாய் நாலாந்தர நாயகர்கள், அறிக்கை விடுகின்றனர்.

இது குறித்த ‘பரபரப்பான’ விவாதங்களில் செலவிடுகிற நேரத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட, நம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த படிப்பு மீது நாம் வழங்கத் தயாராக இல்லை.

’கஷ்டப்பட்டு’ ‘கடனோ முடனோ வாங்கியேனும்’ நம்ம புள்ளைங்க நல்லா வரணும்னு ஆசைப்படாத பெற்றோரே இல்லை. ’இதுக்கு ஒரே வழி, நல்லா படிக்க வைக்கறதுதான்.’

மிகச் சரியான தெளிவான சிந்தனை. அநேகமாக எல்லா அம்மா, அப்பாக்களுக்கும் இது தெரிந்தே இருக்கிறது. ஆரோக்கியமான முன்னேற்றம்தான். ஆனால்…..

எதிர்பார்ப்பும், கனவும், நம்பிக்கையும் மட்டுமே போதுமா…? நம் பிள்ளைகளுக்காக நாம் பெரும் பாடு பட்டுத் தருகிற கல்வி தரமானதுதானா….? பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளுக்கு என்னதான் சொல்லித் தரப் படுகிறது…? அவர்கள் என்னதான் கற்றுக் கொள்கிறார்கள்…? இது பற்றி சற்றேனும் யோசித்துப் பார்த்தோமா…?

2018 ஜூன் மாதம் தொடங்க இருக்கும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வரப் போவதாக  மாநிலக் கல்வி வாரியம் (State Board of Education) அறிவித்து இருக்கிறது. இதற்கான வரைவு பாடத் திட்டத்தை கடந்த வாரம் வெளியிட்டு இருக்கிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை, அத்தனை வகுப்புகளுக்கும் அத்தனை பாடங்களும் மாற்றி அமைக்கப் படுகின்றன.

ஒன்று, ஆறு, பதினொன்று வகுப்புகளில் தொடங்கி, படிப்படியாக (ஒவ்வோர் ஆண்டும்) விரிவு படுத்தப் படும். அதாவது, வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பு படிக்க இருக்கும் சிறுவர்களுக்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் ஆகும். அவர்கள் இரண்டாம் வகுப்புக்கு செல்கிற போது, இரண்டாம் வகுப்புக்கான புதிய பாடத் திட்டம் அமலாகும்.

இதேபோல, வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.

அத்தனை வகுப்புகளுக்கும் அத்தனை பாடங்களுக்குமான புதிய பாடத் திட்டத்தின் வரைவு (Draft) வடிவம், தமிழக அரசால் அதிகார பூர்வமாக, கடந்த வாரம் வெளியிடப் பட்டுள்ளது. இது முழுவதும், இணையத்தில், பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு இருக்கிறது.

ஏறத்தாழ 700 பக்கக்களுக்கு நீளும் இந்த வரைவு வடிவத்தை, பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்ல எந்த முன் முயற்சியும் எடுக்கப் படவே இல்லை.

பொதுமக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு முக்கிய நிகழ்வு. அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவது மிக அவசியம்.  கல்வித் துறைக்கு ஏன் தோன்றாமல் போனது….?

’இணையத்தில் பொது வெளியில் தந்து விட்டோமே…. போதும்’ என்று கருதுவது, மன்னிக்கவும், பாமரர்களுக்கு இழைக்கப் படும் மிகப் பெரிய அநீதி.

’கல்வியாளர்கள்’ மட்டுமே கருத்து சொல்லலாம்…. மற்றபடி, ‘இவர்களுக்கு’ இது பற்றி எல்லாம் என்ன தெரியும்…? என்று எண்ணிச் செயல்படுவது, அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்.

ஓர் ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான (பாடாவதி) படங்கள் வெளியாகின்றன. அதில் ஏதேனும் ஒரு படம் வெளியாவதி ‘சிக்கல்’ ஏற்பட்டால், கொதித்து எழுகின்றன் ஊடகங்கள். (படத்துக்கு எதிர்ப்பு சரியா தவறா என்பது வேறு.)  ஆனால்….

பல கோடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான பள்ளிக் கல்வியில் மிகப் பெரிய மாற்றம் செய்யப் படுகிறதே…. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், அரசு சுணக்கம் காட்டலாமா என்று மட்டும் எந்த ஊடகமும் கேட்கவே இல்லை.

அரசுதான் கடமை செய்யத் தவ்றி விட்டது. ஊடகங்களாவது தமது ‘ஜனநாயக’ கடமையை செய்யலாமே…? ’சமூக ஆர்வலர்கள்’ ‘சமூகப் போராளிகள்’, மெத்தப் படித்த ‘கல்வியாளர்கள்’, ’அறிஞர்கள்’,  ‘வெட்டிமன்ற’ பேச்சாளர்கள், அவ்வளவு ஏன்… சமூக வலைத் தளங்களில் கூட இது குறித்து ’பேச்சு மூச்சு’ இல்லை!!!

எது எதற்கோ பல லட்சக்கணக்கில் பணம் வாரி இறைக்கப் படுகிறதே… வரைவுப் பாடத் திட்டத்தை, குறைந்த பட்சம், ஒவ்வொரு பள்ளியிலேனும், பெற்றோர், பொது மக்களின் பார்வைக்கு வைக்கச் செய்யலாம். ஏன் கூடாது….?

வேறு எவரையும் விட, பயனீட்டாளர்களின் கருத்துகள்தான் மிக முக்கியம். அவர்களை ‘இருட்டில்’ வைத்திருக்க நினைப்பது ஏன்…?

பல ‘பெரியவர்களின்’ அறிவாற்றலை விடவும், சாமான்யர்களின் அறிவுரை, நாட்டுக்கு அதிக நன்மை பயப்பதாக இருக்கும். காரணம், அதில் போலித்தனம், தன்னலம் சார்ந்த ’கணக்குகள்’ இருக்க சாத்தியங்கள் மிகக் குறைவு.

பொது வெளியில் பொது மக்களின் பார்வைக்கு வைத்து, அவர்களின் நியாயமான கருத்துகளை உள்வாங்கி அவற்றை உள்ளடக்கிய, பாடத் திட்டத்தை வடிவமைப்பதில் என்ன தடை…? என்ன தயக்கம்…?

(வளரும்)