சிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

2. ஒற்றைச்சக்கரவண்டி

புதிய பாடத் திட்டம் குறித்து பலரும் நன்றாகத்தானே சொல்கிறார்கள்…? அச்சமூட்டும் வகையில் அல்லது கவலை தரும் விதத்தில் ஏதும் இருந்தால் யாராவது பேசி இருக்க மாட்டார்களா…?

நியாயமான கேள்வி.

‘எல்லாமே தப்பு; எதுவுமே சரியில்லை…. இது வீண் வேலை…’ என்றெல்லாம் யாருமே குறை சொல்ல முடியாது. பல முனைகளிலே, பல தளங்களிலே சிறப்பாகவே இருக்கிறது.

கணிதம், அறிவியல் பகுதிகள் அருமையாக இருக்கின்றன.

மொழிப் பாடங்கள், குறிப்பாக ஆங்கிலப் பாடம் மிகவும் சிறப்பாக முன் எடுக்கப் பட்டு இருக்கிறது.

தொலை நோக்குப் பார்வையுடன் ’உலகத் தரத்துக்கு இணையாக’, கவனத்துடன் பார்த்துப் பார்த்து செதுக்கப் பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது.

’கணிதப் பார்வை’ வேண்டும் என்கிற நோக்கம், மகிழ்ச்சியாய் எல்லா சிறுவர்களும் பங்கு கொள்கிற வகையில் கணிதப் பாடம் அமைய வேண்டும் என்பதில் உள்ள தெளிவு, செய்முறைப் பயிற்சிகளுக்கு அளிக்கப் படும் முக்கியத்துவம்……

அறிவியல் பாடக் கல்வியில் தற்போதுள்ள பிரசினைகள், இன்னும் அதிக அளவில் சிறுவர்களை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம், நவீனத் தொழில் நுட்பத்தின் பங்கு……

ஆங்கிலப் பாடம் கற்பித்தலில் தலைகீழ் மாற்றம் (‘paradigm shift’), ஒரு பாடமாக அல்லாமல் ஒரு மொழியாக, தகவல் தொடர்பு சாதனமாகப் பயிற்றுவிக்கப் படுவதற்கான வழிமுறை, (’road map’) ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல்…..

மிகச் சரியான பாதையில் மிகத் தெளிவாகப் பயணிக்கிறது புதிய பாடத் திட்டம். அனைவராலும் வரவேற்கத் தக்கதாய் இருக்கிறது.  பிறகு….?

பள்ளிக் கல்வி, அதிலும் தொடக்கக் கல்வி, எதனை வலியுறுத்த வேண்டும்…? எது, முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்…? இங்குதான், குழப்பம். தெளிவின்மை. அதை விடவும், அலட்சியம், அக்கறையின்மை.

பண்புகளை நல்ல பழக்க வழக்கங்களை குண நலன்களை ஊட்ட வேண்டிய சிறு வயதில், ‘படைப்பூக்கம்’ ஏற்படுத்தப் போகிறார்களாம்…!

’விழுமியக் கல்வி’ வழங்கப் படும் என்று கூறுகிறார்கள். பாடத் திட்டமோ, ’பண்பாட்டு விழுமியங்கள்’ என்று மட்டுமே பேசுகிறது.

தனி நபருக்கான பண்பாடு வேறு; பண்பாட்டு விழுமியங்கள் வேறு என்பதே தெரியாமல் எப்படிக் கல்விக் கொள்கை வரையறுக்க முடிகிறது…?

‘எல்லா உயிர்கள் மேலேயும் அன்பா இருக்கணும்…, பெரியவங்க கிட்ட பணிவா நடந்துக்கணும்… பொய் சொல்லக் கூடாது.. திருடக் கூடாது… பிறர் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது….’ இவை யெல்லாம் சிறு வயதில் புகட்டப்பட வேண்டிய நெறிமுறைகள்.

இவற்றில் இருந்து, பண்பாட்டு விழுமியங்கள் முற்றிலும் மாறுபட்டவை.

முன்னது, எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தி வருகிற, அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய மனிதப் பண்புகள்.

பண்பாட்டு விழுமியம் – மாற்றத்துக்கு உரியது. உதாரணத்துக்கு, ’விருந்தோம்பல்.’ தமிழ் இனத்துக்கே உரிய, ஆகச் சிறந்த குண நலன்களில் ஒன்று. மிகச் சிறந்த பண்பாட்டு அடையாளம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்…, மாறி வரும், இயந்திர உலகில் இது, எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் கொண்டது….?

மற்றொரு உதாரணம் பாடத் திட்டக் கொள்கைக் குறிப்பிலேயே உள்ளது. ‘ஆசிரியர் – மாணவர் இடையே நெருங்கிய உறவு; குழுவாக இருந்து கற்றுக் கொள்ளுதல்; ஆசிரியரின் நேரடிப் பார்வையின் கீழ் பயிற்சி பெறுதல்…’ நமது பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று.

தமிழ் சமுதாயம், இந்திய சமுதாயம், ஏன்… கீழை நாடுகள் அனைத்திலுமே காலம் காலமாக இருந்து வருகிற வாழ்வியல் முறை.  தற்போது இது பெருத்த மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாக, ‘கற்றல் – கற்பித்தல்’ முறையில் நிலவி வந்த சமூக அநீதி களையப் பட்டது. வரவேற்கிறோம். பண்பாட்டு அடையாள மாறி இருக்கிறதா இல்லையா….?

பாடத் திட்டக் கொள்கைக் குறிப்பிலேயே, இணைய உரையாடல், சமூக வலைத் தளம், நிகழ்படக் கருத்தரங்கு என்றெல்லாம் கற்பித்தல் முறைகள் பற்றி விரிவாக சொல்லப் படுகின்றனவே, இவையெல்லாம் மாறி வரும் பண்பாட்டு விழுமியங்களை முன் வைக்கின்றனவா இல்லையா…?

தனி நபர் சார்ந்த மனித விழுமியங்களை, குண நலன்களை, பழக்க வழக்கங்களை, வாழ்க்கையின் சிறப்புகளை எளிதில் உணர வைத்தது, சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் இருந்த கல்வி முறை.

’முந்தைய தலைமுறை’ தமிழ் சமுதாயம் கடைப் பிடித்து வந்த வாழ்வியல் நடைமுறைகள், சிந்தனைகள், கோட்பாடுகள், நம் இனத்துக்கே பெருமை சேர்த்தன.

சின்னஞ் சிறு ஊர்களில், மரத்தடியில், பஞ்சாயத்துப் பள்ளிகளில்,  தமிழ் வழியில், இலவசமாகப் படித்து வந்தவர்கள்தாம் இன்றும், நிர்வாகத்தில், பொது வாழ்க்கையில், தனி நபர் ஒழுக்கத்தில் தனித்து விளங்குகின்றனர். இதற்குக் காரணம் – அப்போது இருந்த பள்ளிக் கல்வி.

புதிய தொழில் நுட்பம், வேலைக்கான திறன் வளர்த்தல், ’உலகத்தோடு தொடர்பு கொள்ள’ பழக்குதல்… என்றெல்லாம் யாரும் சொல்லிக் கொண்டு திரியவில்லை.

மிகத் தெளிவாக இருந்தார்கள். தொடக்கக் கல்வி என்றாலே நற்பண்புகளை வளர்க்கிற, ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகிற ’உயிரோட்டம் கொண்ட’ பருவத்தைப் பேணுவதாக இருந்தது.

தற்போது அறிமுகப் படுத்தப் பட இருக்கும் புதிய பாடத் திட்டம், பேச்சளவில் கூட இதிலெல்லாம் நம்பிக்கை தருவதாக இல்லை.

வறண்ட தத்துவங்களைப் பரிந்துரைத்து, அடிப்படை குணாம்சங்களை உதறித் தள்ளி, ‘வெற்றி’ மட்டுமே முக்கியம் என்பதான வெற்று முழக்கங்களைக் கற்றுத் தந்து, மேலும் மேலும் தவறான பாதைக்குத் தமிழகத்தை இட்டுச் செல்கிறது – புதிய பாடத் திட்டம்.

தொடக்கக் கல்விக் காலத்தில் கற்றுத் தரப் படும், தனி நபர் சார்ந்த குண நலன்களை அடித்தளமாகக் கொண்டு, அதனோடு இயைந்த உயர் கல்வி கட்டமைக்கப் பட்டது. அதாவது, விழுமியங்கள், திறன்கள் என்று இரண்டு சக்கரங்களில் நகர்ந்தது பழைய கல்வி முறை.

தற்போது அறிமுகப் படுத்தப் பட்டுள்ள கல்வி முறை, முழுக்க முழுக்க, திறன் வளர்ச்சி என்பதை மட்டுமே ஒற்றை இலக்காகக் கொண்டு, ஒற்றை சக்கரத்தில் ’விரைகிறது’.

தன்னலம் கருதாது, பிறர் இன்ப துன்பங்களில் மனமுவந்து பங்கு கொள்கிற உயரிய மனிதர்கள், தமிழ் நாட்டுக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார்கள் போலும்.

‘வெற்றியாளர்கள்’ தாமாக உருவாகிக் கொள்வார்கள். இத்தனை காலமாகத் தமிழ்நாட்டில் சாதனையாளர்கள் வரவில்லையா என்ன…?

‘திறன் வளர்த்தல்’ என்கிற பெயரில், தமிழ் இனம் முழுவதையும்,  நேர்மையற்ற நற்சிந்தனையற்ற சமுதாயமாக மாற்றி விடுகிற அபாயம், புதிய பாடத் திட்டத்தில் ஒளிந்து கிடக்கிறது.

அரசுக்கோ, கல்வியாளர்களுக்கோ இத்தகைய நோக்கம் நிச்சயமாக இல்லை. சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட திறமையானவர்கள், தூய்மையானவர்கள்தாம் பாடத் திட்டத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.

என்ன ஒன்று…. தம் சிந்தனைகளை ஒரே பக்கமாகச் செலுத்தி,    மறுபுறம் பார்க்கத் தவறி விட்டார்கள். அவ்வளவுதான். விளைவு….?

(வளரும்)